3-வது வாரமாக ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்துக்கு தடை


3-வது வாரமாக ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்துக்கு தடை
x
தினத்தந்தி 7 Dec 2021 8:50 PM IST (Updated: 7 Dec 2021 8:50 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தால் ஒதப்பை தரைப்பாலம் சேதம் அடைந்த நிலையில், 3-வது வாரமாக ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைந்தனர்.

தரைப்பாலம் சேதம்

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதன் காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 19-ந் தேதி பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏரியின் அருகே ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது உள்ள தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகனப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் வாகனங்கள் சீத்தஞ்சேரி, வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வழியாக இயக்கப்படுகின்றன.

கடைகள் வெறிச்சோடின

அதேபோல் இதே மார்க்கத்தில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் வந்து செல்கின்றன. சேதமடைந்த தரைப்பாலம் வழியாக தற்போது இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை இடையே பஸ், லாரி போக்குவரத்து மூலமாக சென்று ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் 17 நாட்களாக ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே நேரடி வாகனப் போக்குவரத்து இல்லாததால் வியாபாரம் இன்றி கடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.

சீரமைக்க கோரிக்கை

கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் காரணமாக கடைகள் மூடி கிடந்ததால் பெருத்த நஷ்டம் அடைந்த நிலையில், தற்போது ஒதப்பை தரைப்பாலம் காரணமாக வியாபாரம் சரிவர இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் வடிந்து விட்டது. இதனால் ஒதப்பையில் சேதமடைந்த தரைபாலத்தை உடனடியாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Next Story