போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகை


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Dec 2021 9:35 PM IST (Updated: 7 Dec 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

மாதர் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்


மாதர் சங்கத்தினர் போராட்டம் 

திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங், கேட்டரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 மாணவிகள் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிமுருகனுக்கு உடந்தையாக இருந்ததாக விடுதி வார்டன் அர்ச்சனாவை கைது செய்தனர்.
ஆனால் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் திருவண்ணாமலை போளூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். 

இதையடுத்து அவரை, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அவருக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி, திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு நேற்று முன்தினம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

வக்கீல்கள் முற்றுகை 

இந்த நிலையில் நேற்று 20-க்கும் மேற்பட்ட வக்கீல்கள், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். மேலும் மாதர் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் வக்கீல்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் வந்து வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். அதன்பேரில் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 (பாக்ஸ்) வக்கீல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். 

அதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை கைது செய்யக்கோரி மாணவிகள் 3 நாட்கள் போராட்டம் நடத்தினர். மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் 2 போக்சோ உள்பட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆனால் அவர் 15 நாட்கள் கூட சிறையில் இருக்காத நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். மேலும் அதுகுறித்து கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மாதர் சங்க நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்த வக்கீல் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story