தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
எரியோடு அருகே, கள்ளக்காதல் தகராறில் தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
திண்டுக்கல்
தொழிலாளி கொலை
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள சவரியார்பட்டியை சேர்ந்தவர் கலைவேந்தன் (வயது 42). தொழிலாளி. அவருடைய மனைவிக்கும், ஒத்தக்கடையை சேர்ந்த தொழிலாளி துரைப்பாண்டி (32) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் கடந்த 30.9.2016 அன்று கலைவேந்தனின் வீட்டுக்கு துரைப்பாண்டி சென்றார். அங்கு கலைவேந்தனின் அத்தையிடம் துரைப்பாண்டி தகராறில் ஈடுபட்டார். அப்போது வீட்டுக்குள் இருந்த கலைவேந்தன் சத்தம் கேட்டு வெளியே வந்து துரைப்பாண்டியை கண்டித்தார்.
இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த துரைப்பாண்டி கத்தியால் கலைவேந்தனை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கலைவேந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை தொடர்பாக, எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி ஜமுனா வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் மனோகரன் ஆஜராகி வாதாடினார்.
இதற்கிடையே வழக்கு விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட துரைப்பாண்டிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story