நாய்கள் குறுக்கே சென்றதால் விபரீதம்: மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி


நாய்கள் குறுக்கே சென்றதால் விபரீதம்: மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 7 Dec 2021 5:12 PM GMT (Updated: 7 Dec 2021 5:12 PM GMT)

கறம்பக்குடி அருகே நாய்கள் குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் கீழே விழுந்து பலியானார். ஒரு நாயும் செத்தது.

கறம்பக்குடி:
உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை
கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராம்ஷா. இவரது மகன் சேக்முகமது (வயது 35.) இவர், புதுக்கோட்டையில் மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். மேலும் ஆட்டோ கன்சல்டிங் தொழிலும் செய்து வந்தார். 
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் தொழில் நிமித்தமாக திருச்சி சென்றுவிட்டு புதுக்கோட்டைக்கு வந்தார். பின்னர் அங்குள்ள மோட்டார் உதிரிபாகங்கள் கடையில் கணக்குகளை பார்த்து முடித்துவிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கறம்பக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வாலிபர் பலி
கறம்பக்குடி அருகே உள்ள மறவன்பட்டி சாலையில் சென்றபோது நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென ஓடிவந்தன. இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் ஒரு நாயின் மீது ஏறி இறங்கியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சேக்முகமது தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். நாயும் செத்தது. 
இதுகுறித்து தகவலறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேக்முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மழையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான சேக்முகமதுவிற்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
கோரிக்கை 
கறம்பக்குடி பகுதியில் சாலைகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த ஒருமாதத்தில் நாய்களால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், மாணவர்கள், முதியவர்கள் என பலரையும் நாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. எனவே கறம்பக்குடி பகுதியில் கட்டுபாடற்ற வகையில் பெருகிவரும் நாய்களை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story