திருப்பத்தூர் அருகே சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


திருப்பத்தூர் அருகே சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Dec 2021 12:06 AM IST (Updated: 8 Dec 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

சுடுகாடு

திருப்பத்தூர் அருகே இர்ணாபட்டு ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அங்கு இறந்தவர்களின் உடலை ஊரின் எல்லையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வந்தனர். தற்போது சுடுகாட்டிற்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், சுடுகாட்டை சுற்றி தண்ணீர் தேங்குவதாலும் இறந்தவரின் உடல் அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி (75). என்ற மூதாட்டி வயது முதிர்வு காரணமாக இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுடுகாட்டிற்கு செல்லும் வழியிலேயே மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று மேலும் ஒருவர் இறந்தார். இதனால் அவரது உடல் சுடுகாட்டில் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்−ஆலங்காயம் மெயின் ரோடு இர்ணாப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயா, ஆணையாளர் பிரேம்குமார் மற்றும் தாலுகா போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மறியலில் ஈடுபட்டவர்கள் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும், சாலையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதற்கு அதிகாரிகள் தொடர் மழை காரணமாக சுடுகாடு அருகே உள்ள ஏரி நிரம்பி சுடுகாட்டை சூழ்ந்துள்ளது. எனவே நீர் வற்றியதும் தரைப்பாலம் அமைத்து தரப்படும், தற்காலிகமாக மண் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். 

சுமார் ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story