வீட்டுக்குள் கருகி கிடந்த தாய்-மகள் உடல்கள்


வீட்டுக்குள் கருகி கிடந்த தாய்-மகள் உடல்கள்
x
தினத்தந்தி 8 Dec 2021 12:08 AM IST (Updated: 8 Dec 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அருகே வீட்டுக்குள் தாய்-மகள் உடல்கள் கருகிய நிலையில் கிடந்தன. அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனைக்குளம்
ராமேசுவரம் அருகே வீட்டுக்குள் தாய்-மகள் உடல்கள் கருகிய நிலையில் கிடந்தன. அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருகிய நிலையில் உடல்கள்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள்(வயது 58). இவர் ரெயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள்.
மூத்த மகள் சண்முகப்பிரியா. இவர் திருமணம் முடிந்து மதுரையில் வசித்து வருகிறார். 2-வது மகள் மணிமேகலை(34). இவர் தாயாருடன்  வசித்து வந்தார்.
மதுரையிலிருந்து சண்முகப்பிரியா நேற்று காலை மண்டபத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு  வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. மேலும் உள்ளே இருந்து கருகிய நாற்றம் வௌிவந்தது. 
சந்தேகம் அடைந்த சண்முகபிரியா, வீட்டின் பின்பக்க பகுதிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு தாயார் காளியம்மாள், தங்கை மணிமேகலை ஆகிய இருவரும் தீயில் எரிந்து கருகிய நிலையில் பிணமாக கிடந்த காட்சியை கண்டு அலறினார். 
போலீசார் விசாரணை
உடனடியாக அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் ஓடிவந்தனர். இதுகுறித்து மண்டபம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 
ராமேசுவரம் உதவி சூப்பிரண்டு தீபக் சிவாஜ், மண்டபம் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். 
மேலும் தடயவியல் அதிகாரி வினிதா தலைமையில் அங்கு தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து சண்முகப்பிரியா கூறும்போது, “6-ந்தேதி (நேற்று முன்தினம்) செல்போனில் எனது தாயார் பேசினார். அப்போது வீட்டுக்கு வருமாறு கூறினார். அதன்படி வந்து பார்த்தபோது, தாய், தங்கை இருவரும் உடல் கருகி பிணமாக கிடந்தனர். என்னிடம் செல்போனில் என் தாயார் மகிழ்ச்சியுடன் தான் பேசினார். என்ன நடந்தது என்றே தெரியவில்லை” என கண்ணீர்மல்க கூறினார்.
போலீஸ் சூப்பிரண்டு
இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கூறிய போது, “2 பேர் கருகி சாவு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். முழு விசாரணைக்கு பின்னர் தான் உண்மை தெரியவரும்” என்றார். 
இதுகுறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாய்-மகள் கொலை செய்யப்பட்டார்களா அல்லது அவர்களது சாவுக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story