சரக்கு ஆட்டோவில் கழுதைகளை கடத்திய ஆந்திர கும்பல்


சரக்கு ஆட்டோவில் கழுதைகளை கடத்திய ஆந்திர கும்பல்
x
தினத்தந்தி 8 Dec 2021 12:19 AM IST (Updated: 8 Dec 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் இருந்து சரக்கு ஆட்டோவில் கழுதைகளை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கும்பல் கடத்தியது. வேலூர் போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.

வேலூர்

ஆரணியில் இருந்து சரக்கு ஆட்டோவில் கழுதைகளை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கும்பல் கடத்தியது. வேலூர் போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.

போலீசார் வாகன சோதனை

வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று சங்கரன்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. அதை போலீசார் மறித்தனர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக சென்றார். 
இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை விரட்டிச் சென்றனர். கோட்டை அருகே வந்தபோது ஆட்டோவை போலீசார் மடக்கினர். அப்போது ஆட்டோவில் இருந்த 3 பேர் தப்பிச்சென்றனர்.

 டிரைவரை போலீசார் மடக்கி பிடித்தனர். ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 7 கழுதைகள் இருந்தன.
இதுகுறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சீனிவாசலால் என்பது தெரியவந்தது. மேலும், அவர் நான் டிரைவர் மட்டும் தான் எனக்கும், கழுதைகளுக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது என்றும் வாகனத்தை குண்டூருக்கு ஓட்டிச் செல்ல வேண்டும் என தெரிவித்து ஆரணிக்கு அழைத்து சென்றதாக தெரிவித்தார்.

மரக்கட்டைகள் கடத்துவதற்கா?

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையம், கொசப்பாளையம் பகுதிகளில் பலர் கழுதைகளை பொதி சுமக்க வளர்த்து வருகின்றனர். அந்த பகுதிகளில் இருந்து கழுதைகளை இவர்கள் திருடி குண்டூருக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், கழுதைகளை பொதி சுமக்க பயன்படுத்த கடத்தி உள்ளனர். ஆந்திர வனப்பகுதியில் செம்மரம், சந்தன மரங்கள் ஏராளமாக உள்ளது. அதை பலர் வெட்டி கடத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

மலைப்பகுதிகளில் கழுதைகள் எளிதாக அதிக பாரத்தை சுமந்து செல்லும். எனவே மரக்கட்டைகளை கடத்துவதற்கு கழுதைகள் பயன்படும் என்பதால் அதை திருடி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் குண்டூரில் கழுதை இறைச்சி கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதற்காக கடத்தப்பட்டதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். கழுதைகள் மற்றும் பிடிபட்ட நபரை ஆரணி டவுன் போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story