பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Dec 2021 1:04 AM IST (Updated: 8 Dec 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வள்ளியூர்:

வள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடி கிராமத்தில் மழை நீருடன், சாக்கடை நீரும் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனை அகற்றக்கோரி கடந்த 4-ந் தேதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை வெள்ள நீரை அகற்றவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று வள்ளியூர்- திருச்செந்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ராதாபுரம் தாசில்தார் ஜேசுராஜன், வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமயசிங் மீனா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர் அகற்றப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story