தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்


தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 8 Dec 2021 1:13 AM IST (Updated: 8 Dec 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அருகே காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்வதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்வதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
காட்டுயானை 
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, மான், மிலா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் அத்தி கோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, வாழை, பலா ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இறங்கும் காட்டு யானைகள் அத்தி கோவில் அடிவாரப் பகுதியில் உள்ள தோப்பிற்குள் புகுந்து தென்னை, மா, வாழை, பலா மரங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. 
விவசாயிகள் கவலை
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக நள்ளிரவில் மலைப்பகுதியில் இருந்து இறங்கிய 3  யானைகள் அத்தி கோவில் பகுதியில் உள்ள ராஜ்குமார், ரத்தினவேல் சாமி, ராமகிருஷ்ணா ராஜா, அப்துல்காதர், அப்பால் ராஜா, சீனி துரை, கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களை வேரோடு சாய்த்தும், தென்னை மரங்களில் உள்ள குருத்துக்களை உடைத்து சேதப்படுத்தியும், வாழை மரங்களை உடைத்தும், பலா மரங்களில் உள்ள பலாக்காய்களை மரத்தில் இருந்து பிடுங்கி கீழே போட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர். இது போன்று விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாக உள்ளதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story