சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - விமான நிலைய ஆணையகம் நடவடிக்கை
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்,
தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்காளதேசம், மொரீஷியஸ், போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு வருகை தரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பயணிகளுக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் உள்பட 14 நாட்கள் கண்காணிப்பில் இருக்க உத்தரவிட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்தியா வரக்கூடிய பன்னாட்டு விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் வரும்வரை விமான நிலைய வளாகத்திலேயே பயணிகளை தங்கவைக்க வேண்டும் போன்ற புதிய கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் டிசம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய விமான நிலைய ஆணையகம் தனியாக இடவசதி செய்யப்பட்டு உள்ளது.
ரூ.700 கட்டணத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவு வர 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். எனவே ரூ.3,400 கட்டணத்தில் 45 நிமிடங்களுக்குள் முடிவு வர கூடிய ரேபிட் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து ரூ.3,400 கட்டணத்தில் ரேபிட் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்த பரிசோதனை செய்ய ஆன்-லைனில் முன்பதிவு செய்து இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரூ.3,400 கட்டணத்தில் செய்யப்படும் ரேபிட் பி.சி.ஆர். பரிசோதனையில் ரூ.500 குறைத்து ரூ.2,900 கட்டணத்திலும் ரூ.700 கட்டணத்தில் செய்யப்படும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டணம் ரூ.100 குறைத்து ரூ.600 கட்டணத்திலும் செய்து கொள்ள விமான நிலைய ஆணையகம் சலுகை அறிவித்து உள்ளது.
இந்த கட்டண குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வரும் 2 சதவீத பயணிகளுக்கான ஆர்.டி.சி.பி.ஆர். பரிசோதனை கட்டணத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story