மக்காச்சோள விளைச்சல் அமோகம்


மக்காச்சோள விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 8 Dec 2021 6:11 PM IST (Updated: 8 Dec 2021 6:11 PM IST)
t-max-icont-min-icon

மக்காச்சோள விளைச்சல் அமோகம்

காங்கேயம் பகுதியில் நடப்பாண்டு மக்காச்சோள விளைச்சல் அமோகமாக உள்ளது.
மக்காச்சோளம் சாகுபடி
காங்கேயம் பகுதியில் குங்காருபாளையம், வட்டமலை, புதுப்பாளையம், சம்பந்தம்பாளையம், செம்மங்காளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்வது வழக்கம். வருடம்தோறும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சீசனில் மக்காச்சோள நடவுப் பணிகளை விவசாயிகள் தொடங்குவார்கள். பருவமழை மற்றும் பி.ஏ.பி. தண்ணீரை பயன்படுத்தி மக்காச்சோளம் விளைவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த பகுதிகளில் ஆடி, ஆவணி மாதங்களில் மக்காச்சோளம் விதைப்பு செய்வது வழக்கம். வடகிழக்கு பருவமழை காலமான ஆவணி முதல் கார்த்திகை மாதம் வரை மானாவாரி பயிர்களைத் தவிர மற்ற பயிர்களை பயிரிட்டால் விளைச்சல் போதிய அளவில் இருக்காது என்பதால் மக்காச்சோளம் பயிரிடுவதை விவசாயிகள் விரும்புகின்றனர்.
தேவை அதிகரிப்பு
இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் உள்ளூர் வியாபாரிகள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு உடுமலை, குண்டடம், பல்லடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழித்தீவன நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கோழிப்பண்ணைகள் பெருகிவிட்ட நிலையில் கோழித்தீவனத்திற்கான மூலப்பொருள் மக்காச்சோளமாக உள்ளதால் அதன் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் கோழிப்பண்ணைகள் பெருகிவரும் இந்த நேரத்தில் கோழி வளர்ப்புக்கான தீவனத்தில் மக்காச்சோளம் முக்கிய இடம் பெறுவதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் அடுத்த ஒருவருடத்திற்கான கால்நடைகளுக்கான தீவனப் பிரச்சினை மக்காச்சோளத்தால் பூர்த்தி செய்யப்படுவதால் மக்காச்சோளம் பயிரிடும் பரப்பும் அதிகரித்துள்ளது. காங்கேயம் பகுதிகளில் மட்டும் நடப்பு பருவத்தில் பல ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்யப்பட்டு தற்போது கதிர் விட்டு நிற்கிறது. கார்த்திகை இறுதி முதல் அறுவடை பணிகள் தொடங்க உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story