காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரிப்பு


காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2021 6:53 PM IST (Updated: 8 Dec 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

கூடலூர்

முதுமலை சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

காட்டுயானைகள் நடமாட்டம்

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது. மேலும் பச்சை புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் பசுந்தீவனத்தை தேடி பல்வேறு இடங்களுக்கு சென்ற காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் முதுமலை வனத்துக்கு திரும்பியுள்ளன.

இதன் காரணமாக முதுமலையில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து மைசூரு- கூடலூர், தெப்பக்காடு-மசினகுடி உள்ளிட்ட சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் காட்டுயானைகள் அதிகளவு காணப்படுகிறது. 

வேகமாக இயக்கக்கூடாது

இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் காட்டுயானைகளை காணும் ஆவலில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்து வருகின்றனர். இதன் காரணமாக சில சமயங்களில் வாகனங்களை காட்டுயானைகள் துரத்துகிறது. 

இதேபோல் மான்கள் கூட்டமாக சாலைகளை கடந்து செல்கிறது. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பக சாலைகளில் வாகனங்களை வேகமாக இயக்கக்கூடாது என்று வனத்துறையினர் அறிவிப்பு பலகைகளை வைத்து உள்ளனர். அதை மீறி வெளிமாநில வாகன ஓட்டிகள் வேகமாக செல்கின்றனர். இதனால் வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. 

கடும் நடவடிக்கை

எனவே காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதால் மாலை அல்லது இரவில் சாலையில் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தொடர் மழையால் வனப்பகுதி பசுமையாக உள்ளது. காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகளவு தென்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை வேகமாக இயக்கக்கூடாது. அவ்வாறு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story