திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை


திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 8 Dec 2021 9:18 PM IST (Updated: 8 Dec 2021 9:18 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் கவுதம் (வயது 24). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த புவனேஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த மாதம் 10-ந்தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக புவனேஸ்வரி, தனது கணவர் உள்பட யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
இதற்கிடையே நேற்று கவுதம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு புவனேஸ்வரி உள்ளே இருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், கவுதமின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்படி அங்கு வந்த உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, புவனேஸ்வரி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சாந்தி விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

Next Story