ராமநத்தம் பகுதியில் மர்மமான முறையில் செத்து மடியும் கால்நடைகள் கடந்த ஒரு வாரத்தில் 10 ஆடுகள் சாவு


ராமநத்தம் பகுதியில்  மர்மமான முறையில் செத்து மடியும் கால்நடைகள் கடந்த ஒரு வாரத்தில் 10 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 8 Dec 2021 10:05 PM IST (Updated: 8 Dec 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் பகுதியில் மர்மமான முறையில் கால்நடைகள் செத்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

ராமநத்தம், 

ராமநத்தம் அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி மகன் வீரமுத்து(வயது 45). இவர்ஆடுகளை வைத்து மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். 

நேற்று இவருக்கு சொந்தமான 2 ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் இறந்தன. அதேபோல் கடந்த வாரம் 2 பெரிய ஆடுகள், 6 குட்டிகளும் செத்துள்ளன. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 10 ஆடுகள் செத்துள்ளன.

ராமநத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆடு, மாடுகளுக்கு கோமாரிநோய் பரவி வருகிறது. இதனால் அந்த 2 ஆடுகளும் 8 குட்டிகளும் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

மருத்துவ முகாம்

ஆடுகள் இறந்தது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வீரமுத்து கோரிக்கை விடுத்து வருகிறார்.  

மேலும் ராமநத்தம் பகுதியில் ஆடுகள், மாடுகளுக்கு கோமாரி நோய் பரவல் அதிகரித்து வருவதால் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story