வேலூரில் வயிற்றுப்போக்கால் 2 குழந்தைகள் சாவு
வேலூரில் வயிற்றுப்போக்கால் ஒரே வீட்டில் 2 குழந்தைகள் இறந்தன.
வேலூர்
வேலூரில் வயிற்றுப்போக்கால் ஒரே வீட்டில் 2 குழந்தைகள் இறந்தன. பிேரத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
வயிற்றுப்போக்கால் அவதி
வேலூர் மாநகராட்சி கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்தவர் அன்சர் (வயது 34), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சுரேயா. இவர்களுக்கு ஆப்ரின் (4), அசேன் (3) என 2 குழந்தைகள். மகள் ஆப்ரின் கடந்த 2 நாட்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு பெற்றோர் அழைத்துச்சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வரும்போது பொறித்த மீன் துண்டுகளை அன்சர் வாங்கி வந்துள்ளார். அதனை மகள் ஆப்ரின், மகன் அசேனுக்கு கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 2 பேரும் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளனர். அதையடுத்து குழந்தைகளுக்கு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மருந்தை கொடுத்துள்ளனர். அதன்பின் சிறிது நேரத்தில் வாந்தி எடுப்பது நின்று விட்டது.
2 குழந்தைகள் சாவு
இந்த நிலையில் நேற்று காலை குழந்தைகளின் உடல்நிலை திடீரென மோசமானது. அதையடுத்து பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருந்துக்கடையில் மாத்திரை வாங்கி 2 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர். சிறிதுநேரத்தில் குழந்தைகள் சுயநினைவை இழந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக 2 குழந்தைகளையும் சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இருவரையும் டாக்டர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதைக்கேட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அதைத்தொடர்ந்து 2 குழந்தைகளின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரேத பரிசோதனைக்கு பின்னரே...
இந்த சம்பவம் குறித்து அரசு டாக்டர்கள் கூறுகையில், குழந்தைகளுக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கு இருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். மேலும் நேற்று முன்தினம் இரவு பொறித்த மீன்துண்டுகள் சாப்பிட்டதாகவும், அதனால் வாந்தி அதிகமாக ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் உள்ள மருந்துக்கடையில் மருந்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்.
குழந்தைகளின் உடல்நிலை மோசமான பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். வரும் வழியிலேயே 2 குழந்தைகளும் இறந்து போனார்கள். குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனினும் அவர்களின் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே உண்மையான காரணம் தெரிய வரும் என்றனர்.
குடிநீர் மாதிரி சேகரிப்பு
அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளதா என்று வீடு, வீடாக நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் சென்று கேட்டறிந்து வருகிறார்கள்.
மேலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் மாதிரி சோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. அவை ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள குடிநீர் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
ஏற்கனவே வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே உள்ள அல்லிவரம் கிராமத்தில் கடந்த 4-ந்தேதி வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story