டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த கார்


டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த கார்
x
தினத்தந்தி 8 Dec 2021 10:51 PM IST (Updated: 8 Dec 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

கார் டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

வேலூர்

பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வேலூர் வழியாக நேற்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை வேலூர் வள்ளலார் பஸ்நிறுத்தம் அருகே காலை 11 மணியளவில் வந்தபோது திடீரென கார் டயர் வெடித்தது.

 இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலை இரும்பு தடுப்புகளில் மோதியபடி அணுகுசாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீதும் கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பெரியபாளையத்தை சேர்ந்த சுப்புலட்சுமி (வயது 50), சந்தனகுமாரி (22), மணிகண்டன் (23), வேப்பமுத்து (22) மற்றும் வேலூர் பெருமுகையை சேர்ந்த சதீஷ்குமார் (23), அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த கார்த்திக் (34) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

 இதைக்கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். பின்னர் அந்த காரை கிரேன் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story