புதுக்கோட்டை நகர பகுதியில் பாரபட்சமின்றி அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
பாரபட்சமின்றி அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட நகர போலீஸ் மற்றும் நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில் அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், புதுக்கோட்டை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெஜினா பேகம் கலந்து கொண்டு பேசுகையில், கீழ ராஜவீதி, மேலராஜவீதி உள்ளிட்ட புதுக்கோட்டை நகர பகுதிகளில் கடைகள் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமிப்புகள் செய்து சாலை வரை கடைகளை போட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், வரத்துவாரிகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதால், மழைக்காலங்களில் மழைநீர் கால்வாயில் செல்லாமலும் சாலைகள் மற்றும் கடைவீதிகள் வழியாக வெளியேற முடியாமலும் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதனை சரி செய்யும் விதமாக, புதுக்கோட்டை நகர பகுதிகளில் எந்த ஒரு பாரபட்சமின்றி அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதன் மூலம், போக்குவரத்து சீராகி, வாகன ஓட்டிகள் சிரமமில்லாமல் செல்வதற்கு வழிவகை ஏற்படும். இதற்கு போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வர்த்தகர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ், வர்த்தக சங்க நிர்வாகிகள், போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story