‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.15½ கோடியில் கட்டப்பட்ட தஞ்சை பழைய பஸ் நிலையம் காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.15½ கோடியில் கட்டப்பட்ட தஞ்சை பழைய பஸ் நிலையம் காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 9 Dec 2021 12:20 AM IST (Updated: 9 Dec 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட பழைய பஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர்:-

தஞ்சையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட பழைய பஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பழைய பஸ் நிலையம்

தஞ்சை மாநகராட்சியின் மையப்பகுதியில் 13 ஆயிரத்து 469 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட பழைய பஸ் நிலையம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு இடிக்கப்பட்டு ரூ.15 கோடியே 49 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த பழைய பஸ் நிலையத்தில்(அய்யாசாமி வாண்டையார் நினைவு பஸ் நிலையம்) 39 பஸ் நிறுத்தங்கள், 49 கடைகள், 4 பொதுக் கழிப்பறைகள், தலா ஒரு கண்காணிப்பு அறை, போலீசார் அறை, 5 பயணிகள் காத்திருப்போர் அறை, கண்காணிப்பு கேமராக்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப அறை, ஒரு பொருட்கள் வைப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வணிக வளாகம்

பழைய பஸ் நிலையத்திற்கு எதிரே 3 ஆயிரத்து 345 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட திருவையாறு வழித்தட பஸ் நிலையமும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு ரூ.14 கோடியே 44 லட்சம் செலவில் புதிதாக வணிக வளாகமாக கட்டப்பட்டுள்ளது.
இங்கு 434 இரு சக்கர வாகனங்கள், 61 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலான நிறுத்துமிடம், 31 கடைகள், 8 உணவகங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் பழைய பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

திறப்பு

இந்த நிலையில் புதிய பஸ் நிலையம், வணிக வளாகம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. பஸ் நிலையத்தையும், வணிக வளாகத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் பஸ்களின் இயக்கத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன்), டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செயல்பாட்டிற்கு வருவது எப்போது?

பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்குவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இந்த பஸ் நிலையத்தில் இன்னும் சிறு, சிறு பணிகள் நிலுவையில் உள்ளதாலும், கடைகளை ஏலம் எடுத்தவர்கள் பொருட்களை கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டியது இருப்பதாலும் கடைகள் திறப்பு மற்றும் பஸ்கள் இயக்கத்தை முழுமையாக செயல்படுத்த 1 வாரம் ஆகும். அதன்பிறகு தான் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்.
புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கடைகளை ஏலம் விட்டதன் மூலம் வைப்பு தொகையாக மட்டும் ரூ.7 கோடியே 8 லட்சம் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஆண்டு வருமானம் ரூ.52 லட்சத்து 53 ஆயிரம் கிடைத்து வந்த நிலையில் தற்போது ஆண்டிற்கு ரூ.5 கோடியே 2 லட்சம் வாடகை உரிமமாக கிடைக்க உள்ளது என்றனர்.

Next Story