உறவினர்கள் 6 மணி நேர போராட்டத்துக்குபின் மாணவர் மணிகண்டன் உடல் மறுபரிசோதனை
உறவினர்களின் 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் கல்லூரி மாணவர் மணிகண்டன் உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது சாவுக்கு காரணமான போலீசாரை செய்யக்கோரி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம், டிச.9-
உறவினர்களின் 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் கல்லூரி மாணவர் மணிகண்டன் உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது சாவுக்கு காரணமான போலீசாரை செய்யக்கோரி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோர்ட்டில் மனு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்க்கோழியேந்தலை சேர்ந்த லட்சுமணன்-ராமலெட்சுமி தம்பதியின் மகன் மணிகண்டன் (வயது 20). கல்லூரி மாணவரான இவர் கடந்த 4-ந் தேதி கீழத்தூவல் காளிகோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை போலீசார் வழிமறித்தனர்.
ஆனால், நிற்காமல் சென்றதாக கூறி மணிகண்டனை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்தநிலையில் வீட்டிற்கு சென்ற மணிகண்டன் உடல்நிலை பாதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மணிகண்டனின் தாய் ராமலட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “எனது மகன் இறப்பிற்கு போலீசார் கடுமையாக தாக்கியதே காரணம். எனவே அவனது உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.
ஐகோர்ட்டு உத்தரவு
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, “மணிகண்டனின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். மறுபிரேத பரிசோதனை முடிந்தபின் உடனடியாக உடலை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது..
இதன்படி நேற்று காலை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மணிகண்டனின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்ய கொண்டு வரப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர்கள் சேக்மன்சூர் (ராமநாதபுரம்), முருகன் (பரமக்குடி) ஆகியோர் முன்னிலையில் டாக்டர்கள் முத்துமுனீசுவரன், சக்திவேல் ஆகியோர் மறுபிரேத பரிசோதனை செய்ய சென்றனர்.
அப்போது, மணிகண்டன் தரப்பினர், “தங்கள் சார்பில் ஒருவரை உடன் அழைத்து செல்ல வேண்டும். அவர் முன்னிலையில்தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்” என்றனர். அதற்கு வருவாய் கோட்டாட்சியர்கள் அனுமதி அளிக்கவில்லை.
வாக்குவாதம்
இதற்கு முன்புள்ள வழக்கினை மேற்கோள் காட்டி, உடன் ஒருவர் செல்ல அனுமதிக்கலாம் என்று உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு வருவாய்த்துறையினரும், டாக்டர்களும் மறுத்ததால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடன் ஒருவரை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினர். இதனால் வாக்குவாதம் நீண்ட நேரம் நீடித்தது.
இதன் காரணமாக மாலை 4 மணி வரை மறுபிரேத பரிசோதனை செய்யாமல் இழுபறி நீடித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இதைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் சார்பில் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு, மாவட்ட மாஜிஸ்திரேட்டு என்ற அடிப்படையில், மனுதாரர் சார்பில் ஒருவர் செல்ல அனுமதிக்குமாறு கடிதம் வழங்கப்பட்டது. அதன் ேபரில் அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் அல்லி, அனுமதி கடிதம் வழங்கினார்.
வீடியோ பதிவு
இதனை தொடர்ந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிரேத பரிசோதனை தொடங்கியது. முன்னதாக மணிகண்டனின் உடல் முழுமையாக எக்ஸ்ரே பதிவு செய்யப்பட்டது.
பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன் முன்னிலையில் வீடியோ பதிவுடன் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது மாணவர் மணிகண்டன் தரப்பில், திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் உடன் இருந்தார்.
மணிகண்டனின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்ததை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மீண்டும் போராட்டம்
மறுபிரேத பரிசோதனை முடிந்ததும் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து ஆம்புலன்சில் ஏற்றினர். ஆனால், மணிகண்டன் சாவுக்கு நீதி வேண்டும், அவரை தாக்கிய போலீசாரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதுவரை அவர் உடலை வாங்க மாட்டோம் என மறுத்துவிட்டனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடல் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story