ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது


ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2021 12:42 AM IST (Updated: 9 Dec 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி உதவிக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் மங்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மனைவி முனியம்மாள் (வயது 65).  இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட நிதி உதவி கேட்டு கான்சாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் அங்கு ஊராட்சி செயலராக பணிபுரியும் கான்சாபுரம் மங்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் (45), முனியம்மாளிடம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் நிதி வந்திருப்பதாகவும் அதனைப்பெற  ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. 
இதையடுத்து முனியம்மாள் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான படையினர்  முனியம்மாளிடம் ரூ.10 ஆயிரத்துக்கு ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்தனர். 
பின்னர் அந்த பணத்தை ஊராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்த அய்யனாரிடம் கொடுக்க  செய்தனர். அப்போது அய்யனார் லஞ்சப்பணத்தை பெற்றவுடன் மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இதையடுத்து அவருடைய அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி உதவிக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார். 

Next Story