நெல்லை புதிய பஸ் நிலையம் திறப்பு


நெல்லை புதிய பஸ் நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 8 Dec 2021 7:39 PM GMT (Updated: 2021-12-09T01:09:36+05:30)

ரூ.48 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நெல்லை புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நெல்லை:
ரூ.48 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நெல்லை புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

நெல்லை மாநகராட்சி பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.965 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 28 திட்டப்பணிகள் ரூ.294 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 47 பணிகள் ரூ.615 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதுதவிர 9 பணிகள் ரூ.46 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பல்வேறு நிலை நடவடிக்கையில் உள்ளது.

புதிய பஸ் நிலையம்

இந்த திட்டத்தின் மூலம் நெல்லை வேந்தான்குளம் புதிய பஸ் நிலையம் (பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையம்) ரூ.48 கோடியில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஏற்கனவே இருந்த 4 நடைமேடைகளுடன், தற்போது கூடுதலாக 2 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் தரை தளம், முதல் தளத்தில் கடைகள் கட்டப்பட்டுள்ளன. 6-வது நடைமேடை அருகே நவீன முறையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது. பஸ் நிலையத்தில் அறிவியல் பூங்காவும் அமைந்து உள்ளது.

திறப்பு விழா

இந்த புதிய பஸ் நிலைய திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

இதனுடன் ரூ.13 கோடியே 8 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பாளையங்கோட்டை பஸ் நிலையம் மற்றும் ரூ.6¾ கோடியில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே த.மு. ரோட்டில் 3 அடுக்கில் கட்டப்பட்ட இருசக்கர வாகன நிறுத்துமிடம், ரூ.2 கோடியே 84 லட்சத்தில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் சைக்கிளில் செல்கிறவர்களுக்காக அமைக்கப்பட்டு உள்ள தனி சாலை உள்பட ரூ.110 கோடியே 19 லட்சம் மதிப்பிலான திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கலெக்டர் குத்து விளக்கேற்றினார்

இதையொட்டி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து கொடியசைத்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் லெனின், மாநகர நகர்நல அலுவலர் ராஜேந்திரன் செயற்பொறியாளர் நாராயணன், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்ரமணியம், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன்,
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.ராஜூ, சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கணேஷ்குமார் ஆதித்தன், புதிய பஸ் நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் திருமலைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உற்சாகத்துடன் பயணம்

இதைத்தொடர்ந்து தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து ஒவ்வொரு பஸ்சாக 
புதிய பஸ் நிலையத்திற்கு வரத்தொடங்கின. அங்கிருந்து அனைத்து பஸ்களும் புறப்பட்டு சென்றன. புதுப்பிக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்ற பஸ்களில் பயணிகள் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

புதிய பஸ் நிலையத்தில் முதலில் 131 கடைகள் மட்டுமே இருந்தன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.14 கோடியே 27 லட்சம் மதிப்பில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்பட்டு 44 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு 4 நடைமேடைகள் இருந்தன. தற்போது அங்கு கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 78 பஸ்களை நிறுத்தலாம்.

Next Story