நாய் கடிக்க வந்த விவகாரத்தில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி


நாய் கடிக்க வந்த விவகாரத்தில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 9 Dec 2021 2:53 AM IST (Updated: 9 Dec 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

ராமநகர் அருகே நாய் கடிக்க வந்த விவகாரத்தில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

நாய் விவகாரத்தில் தகராறு

  ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சாத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கபனிகவுடனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப். இவர் தனது வீட்டில் ஒரு நாய் வளர்த்து வருகிறார். இந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் பரமேஷ் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பிரதீப் வீட்டு முன்பாக சென்றார்கள். அப்போது பிரதீப் வளர்த்து வரும் நாய், மோட்டார் சைக்கிளை வழிமறித்து குரைத்ததுடன், கார்த்திக், பரமேசை கடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

  இதுபற்றி பிரதீப்பை செல்போனில் தொடர்பு கொண்டு கார்த்திக் பேசியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், பரமேஷ் சேர்ந்து பிரதீப்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

சுட்டு கொல்ல முயற்சி

  பின்னர் நேற்று முன்தினம் இரவு பிரதீப் வீட்டுக்கு கார்த்திக்கும், பரமேசும் சென்றார்கள். பிரதீப் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கார்த்திக்கும், பரமேசும் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் பிரதீப்பை நோக்கி 2 ரவுண்டு சுட்டார்கள். ஆனால் பிரதீப் மீது குண்டு பாயவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதுபற்றி உடனடியாக சாத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  போலீசார் விரைந்து வந்து கார்த்திக்கை மட்டும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுற்றி வளைத்து கைது செய்தார்கள். பரமேஸ் தப்பி ஓடிவிட்டார். நாய் கடிக்க வந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் மதுஅருந்திவிட்டு, குடிபோதையில் பிரதீப்பை, கார்த்திக்கும், பரமேசும் சுட்டுக் கொல்ல முயன்றது தெரியவந்தது. கார்த்திக்கிடம் இருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாகி விட்ட பரமேசை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story