ரூ.55 கோடியில் கட்டிய பெரியார் பஸ் நிலையம்
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.55 கோடி செலவில் கட்டப்பட்ட மதுரை பெரியார் பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மதுரை,
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.55 கோடி செலவில் கட்டப்பட்ட மதுரை பெரியார் பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
7.46 ஏக்கர் இடம்
மதுரை மக்களின் உள்ளத்தோடும், உணர்வோடும் கலந்தது பெரியார் பஸ் நிலையம். மதுரை மக்கள் எங்கு செல்ல வேண்டும் என்றாலும், பெரியார் பஸ் நிலையம் வந்து செல்ல முடியும். அனைத்து டவுன் பஸ்களும் இங்கிருந்துதான் இயக்கப்பட்டு வந்தன. அதோடு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரியார் பஸ் நிலையம் வந்துதான் செல்ல முடியும்.
இந்த பஸ் நிலையம் கடந்த 1921-ம் ஆண்டு முதல் செயல் பட்டு வருகிறது. மீனாட்சி பஸ் நிலையம், மதுரை பஸ் நிலையம் என்றும் மக்களால் அழைக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு பெரியார் பஸ் நிலையம் என பெயர் சூட்டப்பட்டது. சுமார் 7.46 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியார் பஸ் நிலையம், தமிழகத்தின் பெரிய பஸ் நிலையங்களில் ஒன்றாக திகழ்கிறது.
அடிக்கல்
இந்த பஸ் நிலையத்தை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. இதனை வெறும் பஸ் நிலையமாக மட்டும் அல்லாமல் மிகப்பெரும் வணிக வளாகம் கொண்ட பஸ் நிலையமாக கட்டுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டு கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டியது. அப்போது இதன் திட்ட மதிப்பீடு ரூ.156 கோடியாக இருந்தது. சுமார் 18 மாதங்களில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் கொரோனா மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அந்த காலதாமதத்தால் திட்டமதிப்பீடும் ரூ.174 கோடியே 56 லட்சமாக உயர்ந்தது. பஸ் நிலைய பணிகள் ரூ.55 கோடியும், வணிக வளாக பணிகள் ரூ.119 கோடியே 56 லட்சம் ஆகும்.
நகர் பஸ்கள்
இதில் பஸ் நிலைய பணிகள் மட்டும் முழுவதும் முடிந்ததால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி பெரியார் பஸ் நிலையத்தில் விழா நடந்தது. விழாவில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் இளங்கோ, எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், நகர் பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவி என்ஜினீயர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பஸ் நிலையத்தை திறந்து வைத்தவுடன், அங்கிருந்து முதல் பஸ் சேவையை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பஸ் நிலையம் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த பஸ் நிலைய பணி காரணமாக டி.பி.கே. ரோடு, பஸ் நிலைய பகுதி, கட்டபொம்மன் சிலை ஆகிய 3 இடங்களில் நகர் பஸ்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் அலையாய், அலைய வேண்டி இருந்தது. குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமல் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது பஸ் நிலையம் திறக்கப்பட்டு உள்ளதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
போக்குவரத்து மாற்றம்
இந்த பஸ் நிலையம் திறக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதி முழுவதும் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மிக முக்கியமாக சிம்மக்கல், ரெயில் நிலையம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் இனி நேராக கட்டபொம்மன் சிலை அருகே வலதுபுறம் திரும்பி தினத்தந்தி பாலத்தின் வழியாக ஏற முடியாது. அந்த பாலம் முழுவதும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. எனவே அந்த வாகனங்கள் டி.பி.கே. ரோடு, ஹாய்த்கான் ரோடு வழியாக வந்து பெரியார் பஸ் நிலையம் முன்புறம் வழியாக தினத்தந்தி பாலத்தில் ஏற வேண்டும்.
அதே போல் பழங்காநத்தம், மதுரை கல்லூரி வழியாக முத்து பாலம் வழியாக ரெயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பெரியார் பஸ் நிலையம் முன்பு தினத்தந்தி பாலத்தில் ஏறி வலது புறம் திரும்பி கட்டபொம்மன் சிலை வழியாக செல்ல வேண்டும்.
35 சதவீத பஸ்கள்
இந்த போக்குவரத்து மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வந்தன. முதல் நாள் என்பதால் போக்குவரத்து போலீசார் அதிகஅளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். முதல் நாள் என்பதால் நேற்று பஸ் நிலையத்தில் இருந்து 35 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. படிப்படியாக மற்ற பஸ்களையும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story