சாலை பழுதடைந்தது: ஏற்காட்டுக்கு கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு-சோதனைச்சாவடி ஊழியர்களுடன், டிரைவர்கள் வாக்குவாதம்


சாலை பழுதடைந்தது: ஏற்காட்டுக்கு கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு-சோதனைச்சாவடி ஊழியர்களுடன், டிரைவர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 9 Dec 2021 3:26 AM IST (Updated: 9 Dec 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

சாலை பழுதடைந்ததால் சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு செல்ல கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சோதனைச்சாவடி ஊழியர்களுடன் டிரைவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம்:
சாலை பழுதடைந்ததால் சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு செல்ல கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சோதனைச்சாவடி ஊழியர்களுடன் டிரைவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கனரக வாகனங்கள்
சேலம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் 3-வது கொண்டை ஊசி வளைவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து பழுதடைந்த சாலை பகுதியானது 75 மீட்டர் நீளத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்து, கனரக சரக்கு வாகனங்களை தவிர்த்து பிற வாகனங்கள் மட்டும் ஏற்காடு மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டன.
அதே நேரத்தில் கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் குப்பனூர் சாலை வழியாக ஏற்காடு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பழுதடைந்த சாலையில் மணல் மூட்டைகள் வைத்து சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தது. பின்னர் அந்த வழியாக மீண்டும் கனரக வாகனங்கள் சென்றால் சாலைகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால், கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
அனுமதி மறுப்பு
இந்நிலையில், சேலத்தில் இருந்து ஏற்காடு மலைப்பகுதிக்கு செங்கல், மணல், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நேற்று காலை சென்றன. ஆனால் அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் அந்த வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன.
அப்போது, ஏற்காடு மலைப்பகுதி சாலைகளில் குறிப்பிட்ட தூரம் ஒருவழிப்பாதையாக உள்ளதால், கனரக வாகனங்கள் சென்றால் சாலைகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறி அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் அதை ஏற்காமல் வாகனங்கள் ஏற்காட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டிரைவர்கள் வலியுறுத்தினர். இதனால் சோதனைச்சாவடியில் இருந்த ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 15-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டன. 
பரபரப்பு
இதை தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி, ஏற்காடு இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீண்டும் கலெக்டரிடம் அனுமதி பெற்று வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் ஏற்காடு மலைப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

Next Story