சிப்காட்டிற்கு விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்
சிப்காட்டிற்கு விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நல்லம்பள்ளி அருகே விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டும், வாயில் கருப்பு துணி கட்டியும் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி:
சிப்காட்டிற்கு விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நல்லம்பள்ளி அருகே விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டும், வாயில் கருப்பு துணி கட்டியும் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள வெத்தலக்காரன்பள்ளம் கிராமத்தில் சிப்காட்டிற்கு விவசாய விளைநிலங்களை அரசு கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தக்கோரியும் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று சிப்காட்டிற்கு விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் குடும்பத்தினருடன் நெற்றியில் நாமம் போட்டும், வாயில் கருப்பு துணி கட்டியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
வெத்தலக்காரன்பள்ளம், ஜாகிரிகொட்டாய் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 480 ஏக்கர் விவசாய விளை நிலங்களை சிப்காட்டிற்கு அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளை பாதிக்கும் வகையில் விளை நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்த்து, அரசு புறம்போக்கு நிலங்களை மட்டும் சிப்காட்டிற்கு கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களது கோரிக்கை மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகளை ஒன்று திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story