‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 9 Dec 2021 8:28 AM GMT (Updated: 9 Dec 2021 8:28 AM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

முடங்கியிருந்த பஸ் சேவைக்கு புத்துயிர்


சென்னை மயிலாப்பூர்-தியாகராயநகர் இடையே இயக்கப்பட்டு வந்த 5B பஸ் சேவையை மீண்டும் இயக்கக்கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கை, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக முடக்கப்பட்டிருந்த அந்த பஸ் சேவைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்காக போக்குவரத்து கழகத்துக்கும், ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கும் பயணிகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்து உள்ளனர்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சென்னை சூளைமேடு காமராஜர் தெருவில் (பாலத்தின் மீது) சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த குப்பைகள் அகற்றப்படவும், இனி அங்கு குப்பைகள் கொட்டப்படாமல் இருக்கவும் உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்குமா?

- பொதுமக்கள், சூளைமேடு.

கழிவுநீர் கால்வாயில் கசிவு

சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகர் சேரன் தெருவில் கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் கசிந்து கொண்டே இருக்கிறது. இதனால் துர்நாற்றம் சூழ்ந்து, நோய் பரவும் சூழல் உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- பொதுமக்கள், சேரன் தெரு.

கரடுமுரடான அரசு பள்ளி மைதானம்


சென்னை மணலி மாநகராட்சி மண்டலத்துக்கு உட்பட்ட மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3-வது மெயின் ரோட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புயல் மழை வடிகால் கால்வாய் பணி (எஸ்.டபிள்யூ.டி.) நடைபெற்றது. கால்வாயில் தோண்டி எடுத்த சிமெண்டு கழிவுகள், கருங்கல் பாறைகளுடன் சேர்ந்த மண், பள்ளி விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டு இருக்கிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் நிம்மதியாக விளையாட முடியவில்லை. பலர் தடுமாறி விழுந்து காயம் அடைந்து உள்ளனர். இந்த மைதானம் சீரமைக்கப்படுமா?

- ஆர்.ராஜகோபால், குடியிருப்போர் நல சங்கம்.

தெருவில் ஓடும் கழிவுநீர்

சென்னை வியாசர்பாடி ஸ்ரீராம்நகர் முழுவதும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தெருவில் கழிவுநீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. மேலும் மழைநீர் கால்வாயில் மரங்களின் வேர்கள் அடைத்திருப்பதால் தண்ணீரும் சரியாக வடியாமல் இருக்கிறது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வி.கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீராம் நகர்.

மூடாத பள்ளத்தால் தொடரும் விபத்து



சென்னை ஓ.எம்.ஆர். சத்தியமூர்த்தி சாலை லட்சுமணன் நகர் (185 வார்டு) சாலையில் குடிநீர் வாரிய பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் இருக்கிறது. இதனால் தினமும் அந்த பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பாக இந்த பள்ளம் சீரமைக்கப்படுமா?

- கே.தினகரன், சமூக ஆர்வலர்.

கழிவுநீர் பிரச்சினையால் அவதி

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு ரேஷன் கடை அருகில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி கொண்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு செல்லும் மக்களுக்கு பெரிய இடையூறாக இது அமைகிறது. சில நேரங்களில் கழிவுநீரை மிதிக்காமல் தாண்டி செல்லும்போது, ரேஷன் கடையில் வாங்கிய பொருட்கள் தவறி விழ நேரிடுகிறது. குறிப்பாக வயதானோர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

- பொதுமக்கள், பல்லாவரம்.

மழைநீர்- கழிவுநீர் தேக்கத்தால் கேடு

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட நரிவனச்சாலையில் உள்ள அடிசன் நகரில் முக்கிய சாலையில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கியிருக்கிறது. மேலும் அப்பகுதியில் பழைய டயர்கள், டியூப்களும் கொட்டப்பட்டு இருக்கிறது. இதனால் கொசுக்கள் படையெடுத்து வருகின்றன. இந்த நிலை தொடரும் பட்சத்தில் இப்பகுதிவாசிகள் டெங்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவது நிச்சயம். எனவே இந்த கழிவுநீரை அகற்றித்தர மாங்காடு பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள், மாங்காடு.

முகவரி இல்லாத தெருக்கள்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மராஜாம்பேட்டை கிராமம் கம்பளியான் தோப்பு பகுதியில் 6 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களுக்கு பெயர்கள் எதுவும் கிடையாது. வீடுகளுக்கும் எண் கிடையாது. இதனால் பல சேவைகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. முகவரி இல்லாத தெருக்களுக்கு அடையாளம் கிடைக்குமா?

- கம்பளியான் தோப்பு பகுதி மக்கள்.

சிறுவர் விளையாட்டு திடல் திறக்கப்படுமா?



சென்னை திருவான்மியூர் 182-வது வார்டுக்கு உட்பட்ட குறிஞ்சி குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது. இந்தநிலையில் கொரோனா கால ஊரடங்கின்போது இந்த திடல் மூடப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் இந்த விளையாட்டு திடல் திறக்கப்படவேயில்லை. இதனால் பல மாதங்களாக மூடப்பட்டு கிடக்கிறது. முறையான பராமரிப்பின்றி இத்திடல் சீரழிந்து வருகிறது. இத்திடல் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

- பொதுமக்கள், திருவான்மியூர்.

Next Story