ஆவடி பஸ் நிலையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட பள்ளி மாணவிகள்
பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவிகள் மோதல்
ஆவடி பஸ் நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது திடீரென மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கையால் தாக்கிக்கொண்டனர்.
அதில் இரண்டு மாணவிகள், ஒருவரது தலைமுடியை ஒருவர் பிடித்துக்கொண்டு கடுமையாக மோதிக் கொண்டனர். சக மாணவிகளுடன் சேர்ந்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர் மற்றும் பெண் பயணி ஒருவர், மோதலில் ஈடுபட்ட மாணவிகளை சமாதானம் செய்ய முயன்றனர். பெண் பயணி எவ்வளவோ முயன்றும் மாணவிகளின் மோதலை தடுக்க முடியவில்லை. மாணவிகள் இருவரும் தொடர்ந்து ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டனர்.
இந்த 2 மாணவிகளுக்கு ஆதரவாக சக மாணவிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஒரு மாணவி கீழே விழுந்தார்.
வீடியோவால் பரபரப்பு
இந்த காட்சிகளை அங்கிருந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர் விசில் அடித்தும், கோஷமிட்டபடியும் வேடிக்கை பார்த்ததுடன், தங்கள் செல்போனில் வீடியோவும் எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மோதலில் ஈடுபட்ட மாணவிகள், ஆவடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிளஸ்-1 மாணவிகள் என கூறப்படுகிறது. அவர்களது மோதலுக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. மக்கள் நடமாட்டம் மிகுந்த ஆவடி பஸ் நிலையத்தில் மாணவிகள் மோதிக்கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
Related Tags :
Next Story