வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள்


வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள்
x
தினத்தந்தி 9 Dec 2021 6:00 PM IST (Updated: 9 Dec 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குளறுபடி
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலை நேற்று காலை கலெக்டர் வினீத் வெளியிட்டார். வாக்காளர் பட்டியல் காலை 10.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கு முன்பாகவே வெளியிடப்பட்டு விட்டதாகவும், தங்களை அவமானப்படுத்திவிட்டதாகவும் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக அரசியல் கட்சியினர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். 
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரவி கூறும்போது, மாநகராட்சி பகுதியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஒரு வீட்டில் கணவனுக்கு 31வது வார்டிலும், மனைவிக்கு 32வது வார்டிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுபோல் 27வது வார்டுக்கு உரிய சுமார் 3 ஆயிரம் வாக்காளர்கள் 26வது வார்டுடன் இணைக்கப்பட்டுள்ளனர். ஆண், பெண் வாக்குச்சாவடி அமைப்பதிலும் குளறுபடி காணப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே புகார் தெரிவித்தும் மாநகராட்சியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் உள்ளனர். இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றார்.
பாரபட்சம்
பா.ஜனதா கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், வாக்காளர் பட்டியல் காலை 10.30 மணிக்கு வெளியிடப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டது. 10.15 மணிக்கு நாங்கள் செல்வதற்கு முன்பே வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டுள்ளார். அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துவிட்டு தி.மு.க.வினரை வைத்து வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாரபட்சமான முறையில் மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. இதை பா.ஜனதா கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

Next Story