வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Dec 2021 7:18 PM IST (Updated: 9 Dec 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

போடி:
போடி அருகே பெரியாற்றுகோம்பை வனப்பகுதி உள்ளது. இங்கு கடந்த சிலநாட்களாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போடி வனத் துறையினர் நேற்று காலை அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது வன  பகுதியில் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வனத்துறை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். இதில் அவர் போடி அருகே உள்ள கரட்டுபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி (வயது 37) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது. பின்னர் வனத்துறையினர் அவரை கைது செய்து போடி ஜீவா நகரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் துப்பாக்கி வைத்து கொள்வதற்கு உரிமம் பெற்றவர் என தெரியவந்தது.
இந்தநிலையில் ராஜபாண்டியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய செய்தனர். இந்த சம்பவத்தால் போடியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story