நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
கிருஷ்ணகிரி, டிச.10-
கிருஷ்ணகிரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வெளியிடப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்காளர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஓசூர் மாநகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 1,11,284, பெண் வாக்காளர்கள் 1,05,913, இதர வாக்காளர்கள் 95 என மொத்தம் 2,17,292 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் 26,910 ஆண் வாக்காளர்கள், 28,520 பெண் வாக்காளர்கள், இதரர் ஒரு வாக்காளர் என மொத்தம் 55,431 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதே போல் ஊத்தங்கரை, நாகோஜனஅள்ளி, காவேரிப்பட்டணம், பர்கூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் 41,773-ம், பெண் வாக்காளர்கள் 43,560-ம், இதரர் 27 என மொத்தம் 85,360 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பொதுமக்கள் பார்வைக்கு..
அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 1,79,967 ஆண் வாக்காளர்கள், 1,77,993 பெண் வாக்காளர்கள், இதரர் 123 பேர் என மொத்தம் 3,58,083 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
புகைப்படத்துடன் கூடிய இந்த வாக்காளர் பட்டியல் ஓசூர் மாநகராட்சி அலுவலகம், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலம் மற்றும் 6 பேரூராட்சி அலுவலகத்திலும் பொதுமக்களின் பார்வைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அதிகாரிகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story