இறந்த மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல்
ஓட்டப்பிடாரம் அருகே இறந்த மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி பேச்சியம்மாள் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை தகனம் செய்வதற்காக அந்த பகுதியில் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது சாலையில் அவரது உடலை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓடையில் தண்ணீர் வரும்போது, அதன் வழியாக இறந்தவர் உடலை எடுத்து செல்ல வேண்டி உள்ளதாகவும், எனவே அங்கு மேம்பாலம் அமைத்துதர வேண்டும் என்றும், மயானத்தில் மேற்கூரை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, யூனியன் ஆணையாளர் சுல்தான்பாய், பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரகலா ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மூதாட்டியின் உடலை எடுத்து சென்று தகனம் செய்தனர்.
Related Tags :
Next Story