விசைப்படகு உரிமையாளர் வீட்டில் 82¾ பவுன் நகைகள் கொள்ளை
குளச்சல் அருகே விசைப்படகு உரிமையாளர் வீட்டில் கதவை உடைத்து 82¾ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
குளச்சல்,
குளச்சல் அருகே விசைப்படகு உரிமையாளர் வீட்டில் கதவை உடைத்து 82¾ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விசைப்படகு உரிமையாளர்
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியைச் சேர்ந்தவர் ஆன்டணி பாபு (வயது 48), மீனவர். இவர் கேரளாவில் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராணி (43) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் வெளியூரில் தங்கியிருந்து படித்து வருகிறார். தற்போது, ஆன்டணி பாபு கேரளாவில் இருந்து ஊருக்கு வந்துள்ளார்.
மேலும் தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தார். இதற்காக நகைகளை வாங்கி வீட்டில் வைத்திருந்தார்.
82¾ பவுன் நகை கொள்ளை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ஆன்டணி பாபு தனது மனைவி மற்றும் மகள்களுடன் அருகில் உள்ள குருசடி திருவிழாவுக்கு சென்றார். பின்னர், இரவு 9 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு திரும்பினர்.
வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோ லாக்கரில் வைத்திருந்த 82¾ பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
துணை சூப்பிரண்டு விசாரணை
ஆன்டணி பாபு குடும்பத்துடன் வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால், அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகவில்லை.
மோப்பநாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டது. அது, கொள்ளை நடந்த வீ்ட்டில் இருந்து அந்த பகுதியில் உள்ள கடற்கரை சாலை வழியாக ஓடி அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு நிழற்கூடத்தில் படுத்துக் கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு முழுவதும் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
விசைப்படகு உரிமையாளர் குடும்பத்துடன் வெளியே சென்றதை நோட்டமிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குளச்சல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story