போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள்

போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Dec 2021 11:09 PM IST (Updated: 9 Dec 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

விதிகளை பின்பற்றி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டங்களை இணைக்கும் சாலைகளில் அவ்வப்போது அபாயகரமான விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்தும், 4 சக்கர மற்றும் கனரக வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்தும் வாகனங்களை இயக்க வேண்டும். அதிக வேகத்தில் செல்வதை தவிர்த்து சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்ல வேண்டும். கண் கூசும் கூடுதல் முகப்பு விளக்குகளை பொருத்தக் கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிள், இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் என பிரிக்கப்பட்ட வரிசைகளில் செல்ல வேண்டும். 
மது அருந்திவிட்டு

வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் அதிக பயணிகளை ஏற்றக் கூடாது. சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட பாரத்தை விட அதிக பாரத்தை ஏற்றக் கூடாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Next Story