விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு


விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2021 11:13 PM IST (Updated: 9 Dec 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

ஊட்டி

இரவிலும் நடத்திய தேடுதல் பணியால் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தை விமானப்படை தளபதி ஆர்.வி.சவுத்ரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேடும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரத்தில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் மரங்கள் மீது மோதி விபத்துக் குள்ளாகி முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

இந்த நிலையில் ஹெலிகாப்டர் எவ்வளவு உயரத்தில் பறந்து வந்த போது விபத்து ஏற்பட்டது, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கு தளத்தை அடைய எவ்வளவு தூரம் இருந்தது போன்ற முக்கிய தகவல் அடங்கிய கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்தது.

விமானப்படை தளபதி ஆய்வு 

இதற்கிடையே நேற்று காலை இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஹெலிகாப்டர் விழுந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்து முக்கிய பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து தமிழ்நாடு தடயவியல் துறை இயக்குனர் சீனிவாசன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் வந்த குழுவினர் தடயங்களை சேகரித்தனர். 

இந்த பணியில் விமானப்படை ஊழியர்கள், தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் உதவியோடு தடயங்களை சேகரித்தனர்.

கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

இதற்காக சில பாகங்களை வெட்டி எடுக்க எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. மேலும் ரசாயனங்கள் எடுத்துச் செல்லப் பட்டன. இரவு முழுவதும் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகளின் துணையுடன் கருப்பு பெட்டியை தேடும் பணி நடந்தது. காலையிலும் பணி தொடர்ந்தது. 

இதையடுத்து காலை 10 மணி அளவில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதை விமானப்படையினர் எடுத்துச் சென்றனர். பிறகு அந்த கருப்பு பெட்டியை ஆய்வு செய்வதற்காக பெங்களூருவில் உள்ள ராணுவ மைய விமானப்படைத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

அதிகாரிகள் விசாரணை 

அதிநவீன ஹெலிகாப்டர் வகையைச் சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி, எந்திர கோளாறு அல்லது கடும் பனிமூட்டமான மோசமான வானிலை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணையில் தெரிய வரும். 

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த விபத்து குறித்து விமானப்படை விசாரணை நடத்த உத்தர விட்டது. இதையடுத்து விசாரணை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று கமாண்டோ சிறப்பு குழுவினர் 20 பேர் நவீன கருவிகளுடன் விபத்து நடந்த இடத்திற்கு தந்தனர். 

நவீன கருவிகள் மூலம் ஆய்வு 

பின்னர் அவர்கள் காட்டேரி தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் இருந்து நடைபாதை வழியாக நவீன கருவிகளை 2 பெரிய பெட்டிகளில் தூக்கிக்கொண்டு வந்தனர். மேலும் நவீன டிரோன் கேமராக்களும் கொண்டு வரப்பட்டன. 

இந்த கருவிகள் மூலம் முப்படை தலைமை தளபதி பலியான ஹெலிகாப்டர் எவ்வளவு அடி உயரத்தில் பறந்தபோது விபத்து ஏற்பட்டது? மரங்களின் மீது மோதுவதற்கு முன்பு எவ்வளவு அடி உயரத்தில் பறந்தது? விபத்து நடந்த இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் இறங்குதளத்தை அடைய எவ்வளவு தூரம் இருந்தது? போன்ற தகவல்களை டிரோன் கேமராக்கள் (ஆளில்லா குட்டி விமானம்) பறக்க விடப்பட்டு நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டது.
 

Next Story