தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் பஞ்சாயத்து பூலாம்பட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை முன்பு செடிகொடிகள் வளர்ந்து பயணிகள் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த பஞ்சாயத்து தலைவர் உடனடி நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடை முன்பு முளைத்து இருந்த செடி கொடிகளை அப்புறப்படுத்தினார். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்து தலைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
பொதுமக்கள், பரம்பூர், புதுக்கோட்டை.
உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
கரூர் மாவட்டம், பாலவிடுதி கிராமத்தில் சந்துவார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் மின்தடையும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சந்துவார்பட்டி, கரூர்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீரம்பூரில் இருந்து மருவத்தூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள வயல் வெளியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரம்பூர், திருச்சி.
சாலை வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பரம்பூர் மேட்டுப்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தார் சாலை வசதி இன்றி மண்சாலையானது தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பரம்பூர் மேட்டுப்பட்டி, புதுக்கோட்டை.
ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் உள்ள திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் அப்பகுதிகளில் உள்ள கறிக்கடையில் சேகரமாகும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஆற்று நீர் மாசுபடுவதுடன் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை.
பயணிகளுக்கு இருக்கை வசதி வேண்டும்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கிழக்கு பகுதியில் நகராட்சி கட்டிடத்தில் பயணிகள் காத்திருப்பதற்காக 2 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறைகளில் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் இல்லை. மேலும் அதன்முன்பு மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் அந்த அறைகளில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தவும், அதன்முன்பு மழைநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜவேல், பெரம்பலூர்.
படியில் பயணம் செய்யும் மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூரில் இருந்து இலுப்பூர் வரை கூடுதல் பஸ் வசதி இல்லாததால் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்யும்போது படியில் நின்று பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் பஸ் ஏற முடியாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரனூர், திருச்சி.
டாஸ்மாக் கடையால் பூட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் நகரில் சுத்தமல்லி சாலையில் ஒரே இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன. டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள இடத்திற்கு 10 மீட்டர் இடைவெளியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் எப்போதும் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதும். எனவே அந்த இடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட துவங்கியது முதல் இன்று வரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டிடம் அந்த இடத்தில் செயல்பட முடியாமல் பூட்டப்பட்டு கிடக்கிறது. அதனால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தற்போது வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலக வளாகம் குடிமகன்களின் திறந்தவெளி பாராக செயல்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ம.சுப்பிரமணியன், தா.பழூர், அரியலூர்.
ஏமாற்றம் அடையும் குழந்தைகள்
திருச்சி செல்வநகர் கலைவானர் தெருவில் உள்ள சிறுவர்கள் பூங்காவில் குழந்தைகள் விளையாடும் வகையில் உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அப்பகுதியில் உள்ள ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்து வந்தனர். மேலும் முதியவர்கள், பெண்கள் இந்த பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பழுதடைந்து உடைந்து காணப்படுகின்றன. இதனால் கூட்டம் அதிகமாக இருக்கும்போது குழந்தைகள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தஸ்விகா, செல்வநகர், திருச்சி.
தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்
திருச்சி வயலூர் சாலை பிஷப் ஹீபர் கல்லூரி அருகே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும் போது மழைநீர் கழிவுநீருடன் கலந்து, சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் கழிவுநீரில் கால்வைத்து நடந்து செல்வதினால் எளிதில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஜோ.விஜயராஜ், பாரதிநகர், திருச்சி.
தெருநாய்களால் கீழே விழும் வாகன ஓட்டிகள்
திருச்சி மாவட்டம், மேட்டுப்பாளையம் நகரில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவற்றால் சாலையில் குழந்தைகள் நடமாட முடியவில்லை. தெருநாய்கள் சாலையில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையை கடப்பதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனத்தில் செல்பவர்களை துரத்துகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாவா , மேட்டுப்பாளையம், திருச்சி.
இருள் சூழ்ந்த சாலை
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா வேளக்காநத்தம் ரோடு லட்சுமி நகரில் தெரு மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலையில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி மதுப்பிரியர்கள் மதுப்பாட்டில்களை வாங்கி வந்து சாலையில் அமர்ந்து கொண்டு மது அருந்துகின்றனர். பின்னர் மதுப்பாட்டில்களை சாலையிலேயே உடைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் சாலையில் குழந்தைகள், பெண்கள் செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்த இந்த பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடைபெறவும், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அசாருதீன், முசிறி, திருச்சி.
குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
திருச்சி விமானநிலையம் பாரதிநகர் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. இந்த நீர் கழிவுநீருடன் கலந்து தேங்கி நிற்பதினால் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பாரதிநகர், திருச்சி.
பழுதடைந்த பாதாள சாக்கடை மூடி
திருச்சி பொன்னகர் 2-வது மெயின்ரோடு 4-வது குறுக்குத்தெருவின் முனையில் செல்லும் பாதாள சாக்கடையின் மூடி பழுதடைந்துள்ளதால் அதில் பள்ளமாக காணப்படுகிறது. மேலும் அந்த பள்ளத்தில் தென்னை மரத்தின் துண்டு போடப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் வாகனத்தில் செல்பவர்கள் அவற்றில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பொன்னகர், திருச்சி.
Related Tags :
Next Story