தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 Dec 2021 12:21 AM IST (Updated: 10 Dec 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

குவிந்து கிடக்கும் குப்பை 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிநகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு அருகே தினமும் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
பொதுமக்கள், பாரதிநகர், சாத்தூர். 
சாலை அமைப்பார்களா? 
மதுரை ரெயில்வே மேற்கு பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் இதுநாள் வரையிலும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஜல்லிக்கற்கள் சறுக்கி விடுவதால் அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இப்பகுதியில் விரைந்து சாலை அமைக்க வேண்டும். 
ஜெயஸ்டின், மதுரை. 
சாக்கடை கால்வாய் வேண்டும்
விருதுநகர் மாவட்டம் வலையபட்டி கிராமத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுக்கடியால் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைப்பார்களா?
சங்கர், வலையபட்டி. 
பன்றிகள் தொல்லை 
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் தெற்கு தெரு குடியிருப்பு பகுதிகளில் நாளுக்கு நாள் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. அவைகள் சேறும், சகதியுமாக தெருக்களில் சுற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சாலையின் குறுக்கே திடீரென பன்றிகள் வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 
முஹம்மது பஹீஜ், பனைக்குளம்.
குண்டும், குழியுமான சாலை 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அன்னவாசல் கிராமத்தில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இவ்வழியில் செல்லும் போது வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. விபத்துகளும் அவ்வப்போது நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
பூமிநாதன், அன்னவாசல். 
அடிப்படை வசதி இல்லை 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா மேலராஜகுலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட பேயம்பட்டி மாருதி காலனியில் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை. தற்போது பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 
விஜயன். பேயம்பட்டி
நிற்காமல் செல்லும் அரசு பஸ் 
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி-ஆர்.எஸ்.மங்கலம் வழித்தடத்தில் பூலாங்குடி, ஏந்தல் வழியாக தினமும் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் சில ஊர்களில் நிற்பதில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஜெகதீஸ்வரன், சாயல்குடி. 
குடிநீர் வசதி 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரில் உள்ள புதுத்தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் வசதி இல்லை. இதனால் இங்குள்ள பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
ரஞ்சித்குமார், உசிலம்பட்டி. 
சாலையில் ஓடும் கழிவுநீர் 
மதுரை 92-வது வார்டு மீனாம்பிகை நகர் 5-வது குறுக்கு தெருவில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கார்த்திகேயன், மதுரை. 
சாலை வசதி தேவை 
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சாலை வசதி இல்லை. குண்டும், குழியுமான இந்த சாலையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
கருப்பையா, கொல்லங்குடி. 

Next Story