நெல்லையில் இடி, மின்னலுடன் பலத்த மழை
நெல்லையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
நெல்லை:
நெல்லையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
பலத்த மழை
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. நெல்லையில் நேற்று காலை முதல் மதியம் வரையிலும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. பிற்பகல் 2.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மாலை 4.15 மணி அளவில் மீண்டும் மழை பெய்தது.
நெல்லை சந்திப்பு, டவுன், மேலப்பாளையம், தச்சநல்லூர், பாளையங்கோட்டை, பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. நெல்லை மாநகரில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, சாலை தெரியாதபடி மூழ்கடித்தது. ஏற்கனவே பல்வேறு இடங்களில் காலி இடங்கள் மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் நேற்று பெய்த மழையால் தேங்கிய தண்ணீரின் அளவு அதிகரித்தது.
மேலப்பாளையம் ராஜா நகர் 4-வது தெருவில் மழையின்போது தேங்கிய தண்ணீர் வடியவில்லை. இதனால் அந்த தெருவில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டே செல்கிறார்கள். இதேபோல் நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் தெருக்கள் மற்றும் வீடுகளை மழை தண்ணீர் சூழ்ந்தபடியே கிடக்கிறது.
அணைகள்
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை மொத்த உயரம் 143 அடியாகும். இதில் 137.40 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,243 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,005 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 148.10 அடியாக உள்ளது.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 646 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை உச்ச நீர்மட்டத்தை நெருங்கி இருப்பதால் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் தலை வாய்க்காலில் 400 கன அடி தண்ணீரும், தாமிரபரணி ஆற்றில் உபரிநீராக 1,000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 3 அணைகளும் ஏற்கனவே நிரம்பி விட்டதால் அணைகளுக்கு வருகிற தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story