வீடு புகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு


வீடு புகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2021 1:12 AM IST (Updated: 10 Dec 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் வீடுபுகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறித்த 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை:
பாளையங்கோட்டையில் வீடுபுகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறித்த 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற அரசு மருந்தாளுனர்

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி சந்தானம் (வயது 67). இவர் முன்னீர்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் வீட்டின் தரைத்தளத்தில் தூங்கினார். மாடியில் மகனின் குடும்பத்தினர் தூங்கினர். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் நைசாக சந்தானத்தின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர்.

12 பவுன் நகை 

அப்போது சத்தம் கேட்டு கண்விழித்த சந்தானத்தை 2 மர்மநபர்களும் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகைகளை பறித்தனர். மேலும் பீரோவையும் திறந்து, அதில் இருந்த 5 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பாலச்சந்திரன் பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story