ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
வேடசந்தூர் அருகே, ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர்:
மின் இணைப்பு பெயர் மாற்றம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூரை சேர்ந்தவர் நடராஜ். அவருடைய மகன் தங்கவேல். விவசாயி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடராஜ் இறந்து விட்டார். இதனால் அவரது பெயரில் உள்ள விவசாய நிலத்துக்கான மின் இணைப்பை, தனது பெயருக்கு மாற்ற தங்கவேல் முடிவு செய்தார்.
இதையடுத்து வேடசந்தூரை அடுத்த சேணன்கோட்டையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில், மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்காக தங்கவேல் விண்ணப்பித்தார்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த உதவி பொறியாளர் ரவிக்குமார் (வயது 37), தங்கவேலிடம் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறினார்.
ரூ.6 ஆயிரம் லஞ்சம்
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கவேல், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து மின்வாரிய உதவி பொறியாளரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.6 ஆயிரத்தை தங்கவேலிடம் கொடுத்த போலீசார், அதனை முன்பணமாக மின்வாரிய உதவி பொறியாளரிடம் கொடுக்கும்படி கூறினர். அவரும், அந்த பணத்தை வாங்கிக்கொண்டு மின்வாரிய அலுவலகத்துக்கு நேற்று காலை சென்றார்.
உதவி பொறியாளர் கைது
பின்னர் அந்த பணத்தை உதவி பொறியாளர் ரவிக்குமாரிடம் தங்கவேல் கொடுத்தார். அவர் அந்த பணத்தை வாங்கும் போது அங்கு மறைந்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ், இன்ஸ்பெக்டர் கீதாரூபாராணி மற்றும் போலீசார் ரவிக்குமாரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் துருவி, துருவி போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சிக்கிய சம்பவம், வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story