முப்படை தலைமை தளபதி-அதிகாரிகளுக்கு அஞ்சலி


முப்படை தலைமை தளபதி-அதிகாரிகளுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 10 Dec 2021 2:12 AM IST (Updated: 10 Dec 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி, ராணுவ அதிகாரிகளுக்கு திண்டுக்கல்லில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திண்டுக்கல்: 


முப்படை தலைமை தளபதி 

நீலகிரி அருகே குன்னூரில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் பலியாகினர். இந்த கோர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி, ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்றது.

அதன்படி திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. மாணவர்கள் சார்பில் முப்படை தலைமை தளபதி, ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பால்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் முப்படை தலைமை தளபதி, ராணுவ அதிகாரிகளின் உருவ படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பா.ஜனதா 

அதேபோல் திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். இதில் முப்படை தலைமை தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகளின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் கார்த்திக் வினோத், ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் லோகநாதன், துணை தலைவர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல் 

கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் கிராமப் பகுதிகளிலும் முப்படை தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகளின் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 
அதில் பேத்துப்பாறை பகுதியில் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடைக்கானல் நகர் மற்றும் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மூஞ்சிக்கல் பகுதியில் முப்படை தளபதி உருவ படத்துக்கு  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Next Story