தொழில்அதிபரிடம் ரூ.1¾ கோடி வாங்கி மோசடி - பெண்கள் உள்பட 4 பேர் கைது
பெங்களூருவில் குறைந்த வட்டிக்கு ரூ.100 கோடி கடன் கொடுப்பதாக கூறி தொழில்அதிபரிடம் ரூ.1¾ கோடி வாங்கி மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
ரூ.100 கோடி கடன்
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி, 2-வது ஸ்டேஜ் பகுதியில் வசித்து வருபவர் மந்தீனா வருண்காந்தி. இவர், தொழில்அதிபர் ஆவார். இவரது மாமாவான கிருஷ்ணராஜ் ஆந்திராவில் கியாஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு தொழிலுக்கு பணம் தேவைப்பட்டது. இந்த நிலையில் மந்தீனா வருண்காந்திக்கு 2 பேரின் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும், எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள ஒரு சர்வதேச நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு கடன் பெற்று தருவதாக கூறினார்கள்.
இதுபற்றி தனது மாமாவுக்கு, மந்தீனா வருண்காந்தி தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணராஜ் பெங்களூருவுக்கு வந்திருந்தார். கடந்த 1-ந் தேதி எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் நிதி நிறுவனத்திற்கு கிருஷ்ணராஜை அவர்கள் 2 பேரும் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த நிதி நிறுவன அதிகாரியான கதிர்வேலன் என்பவர், ரூ.100 கோடி கடன் தருவதாகவும், இதற்காக 3 மாத வட்டியை முன்பணமாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரூ.1.80 கோடி மோசடி
இதனை கிருஷ்ணராஜிம் ஏற்றுக் கொண்டுள்ளார். பின்னர் மறுநாள் (2-ந் தேதி) அதே நிறுவனத்திற்கு சென்று 3 மாத வட்டியாக ரூ.1.80 கோடியை தருவதாக கிருஷ்ணராஜ் கூறியுள்ளார். அத்துடன் தன்னுடைய 2 வங்கி கணக்குகளில் தலா ரூ.90 லட்சத்தை, அந்த நிதி நிறுவனம் கூறிய வங்கி கணக்குக்கு கிருஷ்ணராஜ் அனுப்பி வைத்துள்ளார். இன்னும் 3 நாட்களில் ரூ.100 கோடி கடன் கொடுத்து விடுவதாக கதிர் வேலன் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். இதையடுத்து, 3 நாட்கள் கழித்து நிதி நிறுவனத்திற்கு சென்ற போது பூட்டி கிடந்துள்ளது.
மேலும் கிருஷ்ணராஜ், கதிர் வேலன் செல்போனுக்கு தொடர்புகொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மேலும் மந்தீனா வருண்காந்திக்கு பழக்கமான 2 பேரையும் அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. நிதி நிறுவனமும் திறக்கப்படவில்லை. இதனால் தன்னிடம் ரூ.1.80 கோடி வாங்கி மர்மநபர்கள் மோசடி செய்திருப்பதை கிருஷ்ணராஜ் உணர்ந்தார்.
4 பேர் கைது
இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசில் கிருஷ்ணராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் எச்.எஸ்.ஆர். ேல-அவுட் போலீசார், நிதி நிறுவன அதிகாரி என கூறிய கதிர் வேலன் மற்றும் 2 பெண்கள், மற்றொருவர் என 4 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைதான கதிர் வேலன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story