‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 Dec 2021 3:54 AM IST (Updated: 10 Dec 2021 3:54 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உழவர் சந்தையில் கூடுதல் கட்டணம்

சேலம் உழவர் சந்தைக்கு பொதுமக்கள் அதிக அளவு வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து உழவர் சந்தைக்கு உள்ளே இருசக்கரவாகனங்களை நிறுத்துகின்றனர். அவ்வாறு இருசக்கர வாகனங்களை நிறுத்தும் போது 2 ரூபாய் கட்டணமும், கழிவறைக்கு ஒரு ரூபாய் எனவும் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இரு சக்கர வாகனத்திற்கு 5 ரூபாயும், கழிவறைக்கு 5 ரூபாயும் வசூலிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து சரியான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.அலாவுதீன் பாஷா, சேலம்.
=====
குடிநீர் பிரச்சினை 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா முருக்கல் நத்தம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை உள்ளது. தினமும் தண்ணீரை தேடி அலைய வேண்டிய இருக்கிறது. தண்ணீர் குழாய் இருந்தும் பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதுபற்றி கடந்த ஒரு வருடமாக புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து நீண்ட நாள் தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
-கர்ணன், முருக்கல்நத்தம், தர்மபுரி.
===
சாலை வசதி வேண்டும்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா மரக்கோட்டை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு  சாலை வசதி இல்லை. இதனால் வேலைக்கு செல்லவும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லவும், அவசர காலத்தில் மருத்துவமனைக்கு செல்லவும் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலத்தில் மிகவும் சிரமமாக உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதுதொர்பாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், மரக்கோட்டை,சேலம்.
==
சேறும், சகதியுமான சாலை

சேலம் அம்மாபேட்டை 39-வது வார்டு ஸ்டேட் வங்கி காலனி 2-வது தெருவில் சாலை மோசமாக சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் செல்ல பெரும் போராட்டமாக இருக்கிறது. இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும் என்று அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-ஊர்மக்கள், அம்மாபேட்டை சேலம்.
===
ஆமை வேகத்தில் சாலை பணி

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு குப்தாகர் பகுதியில் சாலைகள் சீரமைக்கும் பணிக்காக தெருக்களில் ஒரு அடி பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. சாலை பணி ஆமைவேகத்தில் நடப்பதால் வீடுகளில் இருந்து அவசர தேவைக்கு வாகனங்களை வெளியே எடுக்க முடியாமல் மக்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே மக்களின் அன்றாட பணிகள் பாதிக்காதபடி சாலைப்பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செ.ஜான், குப்தாநகர், சேலம்.
===
தெருநாய்கள் தொல்லை

சேலம் புதிய பஸ் நிலையத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த தெருநாய்கள் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். சில நேரங்களில் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓடிகள் தெருநாய்கள் மீது மோதி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தா.வேல்மணி, சேலம்.
===
தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

சேலம் மாவட்டம் கோணசமுத்திரம், கன்னியம்பட்டி பகுதியில் 3 ஆண்டுகளாக தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் சரியாக பராமரிக்கப்படாததால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே தெருவிளக்கு அமைத்து தரவும், சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களாக? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
-ஊர்மக்கள், கன்னியம்பட்டி, சேலம்.
===
சாலையில் ஓடும் குடிநீர்

சேலம் நெய்க்காரப்பட்டி ஏ.டி.சி. டெப்போ அருகே சின்னதம்பிபாளையத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் தினசரி தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அப்படி தண்ணீர் நிரப்பும் போது தொட்டி நிரம்பி வழிந்து சாலையில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அருகில் உள்ள தாழ்வான வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல மாதங்களாக இதே நிலை தான் காணப்படுகிறது. தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. இது பற்றி பலமுறை மனு கொடுத்தும் எந்த வித பலனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்பியதும் மின் மோட்டாரை நிறுத்த செய்ய வேண்டும்.
பி.விஜயா, நெய்க்காரப்பட்டி, சேலம்.


Next Story