கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 205 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம்
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 205 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
தேனி:
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 521 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 205 பேரின் குடும்பத்துக்கு கடந்த 3 நாட்களில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தாலுகா வாரியாக தேனியில் 48 பேருக்கும், போடியில் 36 பேருக்கும், ஆண்டிப்பட்டியில் 48 பேருக்கும், பெரியகுளத்தில் 24 பேருக்கும், உத்தமபாளையத்தில் 49 பேருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண உதவியை பெற தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம்
விண்ணப்பத்துடன் இறப்புச் சான்றிதழ், கொரோனாவால் இறப்பு என்ற சான்று, வாரிசு சான்று, ஆதார் எண், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தவுடன் அவர்களின் பெயர், விவரங்கள் இணைய வழியில் பதிவு செய்யப்படும். பின்னர், அவற்றை பரிசீலனை செய்து அரசு நிவாரணம் வழங்கப்படும்.
கொரோனா பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்ற நிலையிலோ, சிகிச்சை பெற்று வீடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையிலோ உயிரிழந்த நபர்களிடம் கொரோனாவால் இறப்பு என்ற சான்றிதழ் இல்லை என்றால் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கலாம். அதுபோல், கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று கூறப்பட்ட நிலையில், சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களும் கலெக்டரிடம் மனு அளிக்கலாம்.
பரிசீலனை
அவ்வாறு அளிக்கப்படும் மனுக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் உள்ள, கொரோனா வைரசால் ஏற்பட்ட உயிரிழப்பை உறுதி செய்யும் குழுவால் பரிசீலனை செய்யப்படும். இந்த குழுவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவினர் உரிய விசாரணை செய்து கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தால் அதை உறுதி செய்த பின்பு, இறப்புக்கான காரணம் குறித்த சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழை கொண்டும் இணையவழியில் விண்ணப்பித்து நிவாரணம் பெறலாம். இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story