நீலகிரியில் கடைகள் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின


நீலகிரியில் கடைகள் அடைப்பு சாலைகள்  வெறிச்சோடின
x
தினத்தந்தி 10 Dec 2021 8:01 PM IST (Updated: 10 Dec 2021 8:01 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் கடைகள் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின

கூடலூர்


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மரத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் வீரமரணம் அடைந்தனர்.

வெலிங்டன் மருத்துமவனையில் இருந்து உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லியை சென்றடைந்தது. அங்கு பிரதமர் உள்பட உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

கடைகள் அடைப்பு

விபத்தில் வீரமரணமடைந்த நமது நாட்டின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அனைத்து வியாபாரிகள் சங்கம், உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

அதன்படி ஊட்டியில் நேற்று நகராட்சி மார்க்கெட்டில் உள்ள 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தது. மார்க்கெட் நுழைவுவாயில்களும் அடைக்கப்பட்டன. எப்போது பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி இருந்தது. ஊட்டி கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், லோயர் பஜார், எட்டின்ஸ் சாலை, பிங்கர்போஸ்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் ஓட்டல்கள், காய்கறி, மளிகை, பழக்கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் ஊட்டியில் முக்கிய சாலைகள் வெறிச்சோடின.

பொதுமக்கள் அஞ்சலி

குன்னூரிலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட வில்லை. ஊட்டி, குன்னூரில் வியாபாரிகள், டிரைவர்கள் உள்பட பலர் விபத்தில் வீர மரணமடைந்த ராணுவ அதிகாரிகளுக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். ஆங்காங்கே இறந்த அதிகாரிகள் படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. 

குன்னூரில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள், தேயிலைத்தூள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. கடைகள் அடைப்பு காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்கா சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் விற்பனை கடைகள் வழக்கம்போல் செயல்பட்டது.

கூடலூரில் ஊர்வலம்

இதேபோல் தமிழகம், கர்நாடகா, கேரளா என 3 மாநில எல்லையான கூடலூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து மைசூரு, ஊட்டி, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் செயல்பட்டதால் ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வியாபாரிகள் சங்கம் சார்பாக உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் புறப்பட்டது.

ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று காந்தி திடலை அடைந்தது. பின்னர் அங்கு ராணுவ அதிகாரிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் நடுவட்டம், மசினகுடி, தேவாலா, தேவர்சோலை, பந்தலூர், கொளப்பள்ளி, சேரம்பாடி, எருமாடு உள்பட அனைத்து இடங்களிலும் மவுன ஊர்வலங்கள், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டது.



Next Story