திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 தொழிலாளர்கள் பலி
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கூலித்தொழிலாளர்கள்
திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோடு மேற்கு தெருவை சேர்ந்தவர் சாலமன்ராஜா (வயது 48) கூலித்தொழிலாளி. இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். ஏ.வெள்ளோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி அருள்ராயர் (35). கூலித்தொழிலாளி. இவர் தி.மு.க. ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக இருந்தார்.
இவர்கள் 2 பேரும் நேற்று ஏ.வெள்ளோட்டில் இருந்து நரசிங்கம்பட்டி, கல்லுப்பட்டி வழியாக திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சாலமன் ராஜா ஓட்டி வந்தார். அந்தோணி அருள்ராயர் பின்னால் அமர்ந்து வந்தார்.
லாரி மோதியது
திண்டுக்கல் யாகப்பன்பட்டி அருகே அவர்கள் வந்தபோது, பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து சாலமன் ராஜா, அந்தோணி அருள்ராயர் ஆகிய 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அந்தோணி அருள்ராயர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாலமன்ராஜா படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு இலக்கியா (பயிற்சி), தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் விபத்து நடந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அதேபோல் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரும் அங்கு வந்தனர். அவர்கள் அந்தோணி அருள்ராயர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
2 பேர் பலி
பின்னர் உயிருக்கு போராடிய சாலமன் ராஜாவை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான அந்தோணி அருள்ராயர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் சாலமன் ராஜாவை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் பலியான சாலமன் ராஜாவுக்கு ஜோஸ்பின் கிளாரா (45) என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அந்தோணி அருள்ராயருக்கு மரியசெல்வம் (34) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லாரி டிரைவருக்கு வலைவீச்சு
இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 கூலித்தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story