பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி வாகனங்களை 10 நிமிடம் சாலையில் நிறுத்தி போராட்டம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி சி.ஐ.டி.யூ., கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை 10 நிமிடம் சாலையில் நிறுத்தி போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி சி.ஐ.டி.யூ., கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை 10 நிமிடம் சாலையில் நிறுத்தி போராட்டம் நடைபெற்றது.
வாகனங்களை நிறுத்தி போராட்டம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரியும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் 10 நிமிடங்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தி வைத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி திண்டுக்கல்லில் நேற்று 5 இடங்களில் இந்த போராட்டம் நடந்தது.
திண்டுக்கல்லில் பழனி பை-பாஸ் சாலை, பேகம்பூர், காட்டாஸ்பத்திரி, நாகல்நகர், பஸ்நிலையம் ஆகிய இடங்களில் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் வாகனங்களை 10 நிமிடம் சாலையில் நிறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
பேகம்பூரில் நடந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கே.ஆர். கணேசன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். நாகல்நகரில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். காட்டாஸ்பத்திரி அருகில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். பஸ் நிலையம் அருகே நடந்த போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணை செயலாளர் பாலச்சந்திரபோஸ் தலைமை தாங்கினார்.
துண்டு பிரசுரம்
பழனி மயில் ரவுண்டானா பகுதியில் நடந்த போராட்டத்துக்கு பழனி ஒருங்கிணைப்பாளர் பிச்சமுத்து தலைமை தாங்கினார். அப்போது திண்டுக்கல் சாலையில் வந்த பஸ், லாரி, மோட்டார் சைக்கிள் என அனைத்து வாகனங்களை 10 நிமிடம் நிறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தை வாகன ஓட்டிகளிடம் கொடுத்தனர். அப்போது வாகன ஓட்டிகளில் சிலர் பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதேபோல் வேல் ரவுண்டானாவில் சி.ஐ.டி.யூ. நிர்வாகி மனோகரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. நெய்க்காரப்பட்டியில் பஸ்நிறுத்தம் பகுதியில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யூ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
நத்தம், கன்னிவாடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் நத்தம் பஸ் நிலையம் முன்பு வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன், தாலுகா குழு உறுப்பினர்கள் விஜயவீரன், குழந்தைவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னிவாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சி.ஐ.டி.யூ. சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story