வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் கட்டமைப்பு கட்டாயம்


வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் கட்டமைப்பு கட்டாயம்
x
தினத்தந்தி 10 Dec 2021 10:04 PM IST (Updated: 10 Dec 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் கட்டமைப்பை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார அதிநவீன மின்னணு திரை வாகனத்தை மாவட்ட கலெக்டர் டி.மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்து மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் தொலைநோக்கு திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பான முறையில் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் மழைநீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் ஒளிபரப்ப தமிழக அரசு அறிவுறுத்தியதன்பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரகப்பகுதிகளில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு காணொலி குறும்படத்தை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் மின்னணு திரை வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்த

மழைநீரை சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும், கோடைகால தேவைக்கும் மழைநீர் சேகரிப்பு திட்டம் இன்றியமையாததாக அமையும். எனவே தூய்மையான குடிநீர் மற்றும் எதிர்கால தேவைக்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டாயமாக மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்தி முறையாக பராமரித்து மழைநீரை சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அன்பழகன், உதவி நிர்வாக பொறியாளர் ஆனந்தன், நிலநீர் வல்லுனர் பழனிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story