இந்து முன்னணி சார்பில் மவுன ஊர்வலம்


இந்து முன்னணி சார்பில் மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 10 Dec 2021 10:21 PM IST (Updated: 10 Dec 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணி சார்பில் மவுன ஊர்வலம்

திருப்பூர், 
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மவுன ஊர்வலம்
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் நேற்று மாலை இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் குமரன் சிலை முன்பு ஊர்வலம் தொடங்கியது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில செயலாளர்கள் செந்தில்குமார், தாமு வெங்கடேஷ்வரன் உள்ளிட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
குமரன் ரோடு வழியாக ஊர்வலம் சென்றது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதன் காரணமாக டவுன்ஹாலில் இருந்து மாநகராட்சி சந்திப்பு வரை போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் இந்து முன்னணி கொடி மற்றும் தேசியக்கொடியை கைகளில் ஏந்தியபடி சென்றனர். ஊர்வலத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டவர்களின் உருவப்படத்துடன் அலங்கார வாகனம் சென்றது. ரோட்டோரம் நின்ற பொதுமக்கள் அந்த வாகனத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஊர்வலம் நிறைவடைந்தது. பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உருவ படத்துக்கு மலர் தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
போக்குவரத்து ஸ்தம்பித்தது
இந்த மவுன ஊர்வலம் காரணமாக குமரன் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை நேரத்தில் அலுவலக பணி முடிந்து செல்பவர்கள், பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மவுன ஊர்வலத்துக்கு அதிகப்படியானவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நெரிசலை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை திருப்பூர் மாநகர போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் நேற்று பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.

Next Story