நீதிமன்ற ஆணைக்குட்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை
அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் நடந்த இடத்தை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 19 ஹெக்டேர் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் ரூ.104 கோடியே 40 லட்சத்தில் தொடங்கப்பட்டது.
இதற்கிடையே தனி நபர் ஒருவர், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அறநிலையத்துறைக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணிக்கு உச்சநீதிமன்றத்தில் தடை ஆணையை பெற்றுள்ளார். எனவே மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு வேறு ஏதேனும் வழி உள்ளதா? என்று ஆய்வு செய்துள்ளேன். இது தொடர்பாக மேல்நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். நீதிமன்ற ஆணைகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன், சென்னை பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாதன், வேலூர் மண்டல கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட வருவாய் அதிகாரி விஜய்பாபு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றியக்குழு தலைவர்கள் அலமேலு ஆறுமுகம், தாமோதரன், விழுப்புரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாரதி, கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுதமன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story