குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை பணியிட மாற்றம் செய்யக்கோரி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை பணியிட மாற்றம் செய்யக்கோரி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை
பல்லடம்
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை பணியிட மாற்றம் செய்யக்கோரி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி பணியாளர்கள்
பல்லடம் வட்டாரத்தில் 10 குழந்தைகளுக்கு மேல் இயங்கும் 102 அங்கன்வாடி மையங்களும், 5 குழந்தைகளுக்கு கீழ் இயங்கும் 13 குறு அங்கன்வாடி மையங்களும் உள்ளன. இரண்டும் சேர்த்து 193 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மாத சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பல்லடம் நகரில் உள்ள பச்சாபாளையம், மசூதி வீதி, பொங்கேகவுண்டன்புதூர், ராயர்பாளையம், தெற்குபாளையம், பரமசிவம்பாளையம், செந்தேவிபாளையம், சாமளாபுரம் -2, சாமளாபுரம் -3 ஆகிய இடங்களில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள் தனியார் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை பணியிட மாற்றம் செய்யக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரியை மாற்ற வேண்டும்
இது குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது:-
விஜயலட்சுமி என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பல்லடம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக பணிபுரிந்து வருகிறார். ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசுவது, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது என இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களுக்கு மாதம் தோறும் சரிவர சம்பளம் வழங்கப்படுவதில்லை, தனியார் வாடகை கட்டிடங்களுக்கு கடந்த பல மாதங்களாக வாடகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.
சமையல் எரிவாயு படி, காய்கறி படி பல மாதங்களாக வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டால் தகாத வார்த்தைகளால் திட்டுவது, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது உள்ளிட்ட அடாவடி செயல்களில் ஈடுபடும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரை உடனடியாக பணி இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட சூப்பிரண்டு தமிழ்மணி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து அங்கன்வாடி மைய பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பளம் இன்னும் 2 நாட்களில் வழங்கப்படும் என்று கூறினர். இதற்கு சம்மதிக்காத அங்கன்வாடி பணியாளர்கள் வட்டார அலுவலரை மாற்றியே தீர வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story